சமீபத்தில் வெளியாகி பெரும் பாராட்டுகளையும் ரசிகர்களின் மனதையும் வென்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் இயக்குனரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார் தெலுங்கு நடிகர் நானி.
அறிமுக இயக்குனர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கத்தில் உருவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம், குடும்பம், உணர்வுகள், மற்றும் மனித நேயம் கலந்த Humour கதையாடலால் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் படமாக மாறியது. சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீலங்காவில் இருந்து இந்தியாவிற்கு தஞ்சம் புகும் குடும்பத்தின் பயணத்தை மையமாகக் கொண்டது இத்திரைப்படம்.
படம் வெளியானதிலிருந்து தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் அதிக அளவில் பாராட்டி வந்த நிலையில், இயக்குனர் ராஜமௌலி உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் நேர்மையான பாராட்டுகளை தெரிவித்தனர். அந்த பட்டியலில் தற்போது நடிகர் நானியும் இணைந்துள்ளார்.
நடிகர் நானி, சமீபத்தில் தனது எக்ஸ் தளத்தில்,
“எளிமையான, மனதைத் தொட்டுச் செல்லும் படங்கள் நமக்கு மிகவும் தேவையானவை. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அதைப் பூர்த்தி செய்துள்ளது. இப்படம் அனைத்துவகை உணர்வுகளையும் தந்து மனதை நிறைத்தது. இப்படைப்பில் ஈடுபட்ட அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி!”
என பதிவிட்டிருந்தார்.
இந்த பாராட்டுகள் அப்படியே சமூக வலைதளக் களத்தில் முடிவடையவில்லை. நானி, இயக்குனர் அபிஷான் ஜீவின்ந்தை நேரில் சந்தித்து, தனிப்பட்ட முறையில் வாழ்த்தியதோடு, படத்தின் அனைத்து அம்சங்களையும் விரிவாகப் பேசினார்.
அந்த சந்திப்பு குறித்து இயக்குனர் தனது எக்ஸ் தளத்தில்,
“என்ன ஒரு நாள்! உங்களைச் சந்தித்ததில் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன் நானி சார். நீங்கள் மிகவும் பணிவானவர். படத்தைப் பற்றிய உங்கள் உரையாடல் அதை மேலும் சிறப்பாக்கியது. இதை நான் மறக்கவேமாட்டேன். நன்றி”
என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.