ஹரீஸ் கல்யாண், எம். எஸ். பாஸ்கர் நடித்த பார்க்கிங் திரைப்படம், கார் நிறுத்தும் இடம் குறித்த சிறிய வாக்குவாதம் எப்படி பெரிய மோதலாக மாறுகிறது என்பதைச் சொன்னது. அதுபோல், நிஜ வாழ்க்கையிலும் ஒரு பார்க்கிங் பிரச்சனை உயிர்பலி வாங்கிய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர், பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியின் நெருங்கிய உறவினர் ஆசிப் குரேஷி (கோழி வியாபாரி). இவர் நிஜாமுதின் பகுதியில் வசித்து வந்தார்.
கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணியளவில், ஆசிப்பின் வீட்டின் முன்பு அண்டை வீட்டாரின் பைக் நிறுத்தப்பட்டிருந்தது. பைக்கை நகர்த்துமாறு ஆசிப் கேட்டபோது, இருதரப்பினரிடையே கடும் வாய்த் தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், அந்த நபர் தனது சகோதரருடன் சேர்ந்து கூர்மையான ஆயுதங்களால் ஆசிப்பை பலமுறை குத்தியதாகக் கூறப்படுகிறது. கடுமையாக காயமடைந்த ஆசிப் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
“அவர்கள் ஆசிப்பை இரக்கமின்றி குத்திக் கொன்றனர்” என்று உறவினர்கள் வலியுறுத்தினர்.
ஆசிப்பின் மனைவிகளில் ஒருவரான ஷாஹீன், “இரவு 9.30–10 மணியளவில் பக்கத்து வீட்டுக்காரர் எங்கள் வீட்டின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்தினார். என் கணவர் அதை நகர்த்துமாறு கேட்டார். சில நிமிடங்களில் அவர் தனது சகோதரருடன் திரும்பி வந்து, கூர்மையான ஆயுதத்தால் குத்தினார்” என்று கண்கலங்கினார்.
ஹூமா குரேஷியின் தந்தையும் ஆசிப்பின் மாமாவுமான சலீம் குரேஷி, “நுழைவாயிலை மறைக்காமல் வாகனத்தை ஓரமாக நிறுத்துங்கள் என்று ஆசிப் கேட்டார். இதுவே வாக்குவாதமாகி, பின்னர் சண்டையாகி, இருவரும் சேர்ந்து கொலை செய்தனர்” என்றார்.
சம்பவம் குறித்து ஹூமா குரேஷி இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
டெல்லி போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 103(1) மற்றும் 3(5) கீழ் வழக்குப் பதிவு செய்து, இரு பேரை கைது செய்துள்ளனர். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது. ஆசிப்பின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
















