சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு விஐபி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பிரபல தொழிலதிபர் ஒருவரின் குடும்பத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொழிலதிபரின் மனைவி சிந்தாமணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2025-ஆம் ஆண்டு, இவர்களது குடியிருப்பின் 4-வது மாடியில் சங்கீதா என்பவர் தனது மகன் திலீப்புடன் குடியேறியுள்ளார். அக்கம்பக்கத்தினர் என்ற முறையில் சங்கீதாவுக்கும் சிந்தாமணிக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பைப் பயன்படுத்திக் கொண்ட சங்கீதாவின் மகன் திலீப், மெல்ல மெல்ல சிந்தாமணியுடன் நெருங்கிப் பழகத் தொடங்கியுள்ளார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், திலீப் தனது பணத்தேவைகளுக்காகச் சிந்தாமணியைப் பகடைக்காயாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். திலீப்பின் ஆசை வார்த்தைகளை நம்பிய சிந்தாமணி, சிறுகச் சிறுகச் சுமார் 850 கிராம் தங்க நகைகள், 120 கிராம் வைர நகைகள், 2.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் எனப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைத் திலீப்பிடம் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் கொடுத்த நகைகளையும் பணத்தையும் சிந்தாமணி திரும்பக் கேட்டபோதுதான், திலீப்பின் விஸ்வரூபம் வெளிப்பட்டுள்ளது.
நகைகளைத் திருப்பித் தர மறுத்த திலீப், தாங்கள் இருவரும் தனிமையில் இருந்தபோது எடுத்த அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டிச் சிந்தாமணியை மிரட்டத் தொடங்கியுள்ளார். “நகைகளைக் கேட்டால் இந்த வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உனது குடும்ப மானத்தை ஏலம் விடுவேன்” என மிரட்டியதுடன், மேலும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் சிந்தாமணியின் கணவருக்குத் தெரியவரவே, அவர் திலீப் மற்றும் அவரது தாயார் சங்கீதாவிடம் முறையிட்டுள்ளார். ஆனால், பிடி கொடுக்காத அந்தத் தாய்-மகன் ஜோடி, இரவோடு இரவாகக் குடியிருப்பைக் காலி செய்துவிட்டுத் தலைமறைவாகினர். செல்போன் மூலமாக அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றும் பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னிடம் ஏமாற்றிப் பறித்த தங்கம் மற்றும் வைர நகைகளை மீட்டுத் தருமாறும், அந்தரங்க வீடியோக்களைக் காட்டி மிரட்டும் திலீப் மற்றும் அவரது தாய் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் புகாரில் கோரியுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர். விசாரணையில் திடுக்கிடும் தகவலாக, திலீப் ஒரு கைதேர்ந்த மோசடிப் பேர்வழி என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சமூக வலைதளங்கள் மூலம் பெண்களிடம் பழகி, அவர்களுக்கு ‘விமானப் பணிப்பெண்’ (Air Hostess) வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரும் திலீப் மீது இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள திலீப் மற்றும் அவரது தாயைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.













