திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில், கீழ்மலைப் பகுதிகளில் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாகப் புதன்கிழமை அன்று கொடைக்கானல் அருகே ஒற்றை காட்டு யானை குடியிருப்பு மற்றும் சாலைப் பகுதிகளில் உலா வந்ததால், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டுத் தப்பி ஓடும் சூழல் உருவானது.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான பெரும்பாறை, புல்லாவெளி, கே.சி.பட்டி, தடியன்குடிசை ஆகிய கிராமங்களில் கடந்த சில நாட்களாக இந்த ஒற்றை யானை முகாமிட்டு விளைநிலங்களைச் சேதப்படுத்தி வருகிறது. மேலும், தாண்டிக்குடி – பண்ணைக்காடு செல்லும் மலைச் சாலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாகவோ அல்லது ஒற்றையாகவோ சாலையைக் கடப்பது வழக்கமாகிவிட்டது. இதனால் வத்தலகுண்டு பகுதியிலிருந்து கீழ்மலைக் கிராமங்களுக்குச் சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் வரும் ஓட்டுநர்கள் பெரும் பதற்றத்துடனேயே பயணத்தைத் தொடர்கின்றனர்.
தற்போது மலைப்பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக உணவைத் தேடி யானைகள் ஊருக்குள் புகுவதாகக் கூறப்படுகிறது. இந்த ஒற்றை யானை எப்போது வேண்டுமானாலும் தாக்கும் அபாயம் இருப்பதால், வனத்துறையினர் உடனடியாகத் தலையிட்டு அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விபத்துகளைத் தவிர்க்கப் பொதுமக்கள் இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்குமாறு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.














