தனது பிறந்தநாள் பரிசாகத் தாயுடன் பிரிந்து சென்ற 5 வயதுத் தங்கையைத் தன்னிடம் சேர்த்து வைக்க வேண்டும்” என 9 வயதுச் சிறுவன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த உருக்கமான மனு அனைவரது கண்களையும் குளமாக்கியுள்ளது :-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் தேரழந்தூர் கிராமத்தை சேர்ந்த ஆஸாத் அலி என்பவரது 9 வயது மகன் அல் அப்சார். இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் நெஞ்சை உருக்கும் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.அந்த மனுவில் தனது தாய் மற்றும் தந்தை இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக கடந்த மூன்றரை ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.அப்போது தன்னைத் தந்தையிடம் விட்டுவிட்டு, தனது 5 வயதுத் தங்கையைத் தாய் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார்.கடந்த மூன்றரை ஆண்டுகளாகத் தனது தங்கையைப் பார்க்கப் பலமுறை முயற்சி செய்தும், தாயார் தங்கையைப் பார்க்க அனுமதிக்கவில்லை.
பெற்றோர்களுக்கு இடையேதான் பிரச்சனையே தவிர, உடன் பிறந்த தங்கையைத் தன்னிடமிருந்து பிரித்தது ஏன் என்று தெரியவில்லை.
பள்ளிக்குச் செல்வது மற்றும் விளையாடுவது என அனைத்திலும் தனது தங்கையுடன் சேர்ந்து வாழ தான்ஆசைப்படுவதாகவும் ,வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரவுள்ள தனது பிறந்தநாளுக்குப் பரிசாக, பிரிந்து வாழும் தனது அன்புத் தங்கையைத் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டுமென இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து சிறுவன் கோரிக்கை விடுத்துள்ளான்.பெற்றோர்களின் மனக்கசப்பால் பிரிந்து வாடும் தனது தங்கையைத் தன்னுடனே சேர்த்து வைக்க வேண்டும் என்ற 9 வயதுச் சிறுவனின் இந்தக் கோரிக்கை, ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளது.















