வேலூர் 10 வது பட்டாலியன் என்.சி.சி சார்பில் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் என்.சி.சி.தின விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்று பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வேலூர் 10 வது தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி சார்பில் வாணியம்பாடி இஸ்லாமியா தன்னாட்சி கல்லூரியில் என். சி.சி பயிற்சி முகாம் 10 நாட்கள் நடைபெற்று வருகிறது.இதில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை,வேலூர், திருவண்ணாமலை,திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர்.இந்த நிலையில் இன்று என். சி.சி தினத்தையொட்டிதினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும், இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேலூர் 10 வது தமிழ்நாடு பட்டாலியன் என் .சி.சி கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் வெங்கடீஷ், நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் சுரேந்திரன், வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி துணை முதல்வர் சையத் தாஹிர் ஹுசைனி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.இந்த பேரணியில் என்.சி.சி மாணவ, மாணவிகள் 300 பேர் மற்றும் 30 ராணுவப் பயிற்றுவிப்பு மற்றும் இதர பணியாளர்கள் பங்கேற்று நகரின் முக்கிய சாலைகள் வழியாக பேரணியாக சென்று மீண்டும் கல்லூரியில் பேரணியை முடித்தனர்.இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை இஸ்லாமியா கல்லூரி என்.சி.சி அலுவலர் லெப்டினன்ட் முகமது அசாருதீன் செய்திருந்தார்.







