போதை இல்லா தமிழகம் மற்றும் டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பை வலியுறுத்தி 50 வயதிற்கு மேற்பட்டோர் சார்பில் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவள்ளூர் ராஜாஜி புரம், சுவாதி நகர், உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம் சார்பில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவது மற்றும் டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி 50 வயதிற்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு நடைப்பயண பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் தாமோதரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ராஜாஜிபுரத்திலிருந்து துவங்கிய இந்த பேரணி ஜெ.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை வரை சென்று மீண்டும் அதே வழியாக ராஜாஜிபுரம் வரை 6 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு பேரணியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவது, டெங்கு கொசு ஒழிப்பு, விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவது என்ற பதாகைகளை ஏந்தி வாக்கத்தானில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆய்வாளர் தாமோதரன் , போதை இல்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். வீட்டிற்கு அருகில் கொசுக்கள் தங்காத வகையில் வீட்டையும் சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், சாலை விதிகளை மீறாமல் வாகனங்களை இயக்க வேண்டும். மது அருந்தி வாகனம் ஓட்டக் கூடாது, வாகனம் ஓட்டும் போது செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை இயக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.







