பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற வலங்கைமான் பாடை கட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்த நாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்புமணி ராமதாஸ் அவர்களின் 58வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பு பூஜைகள், அன்னதானம், மரக்கன்றுகள் நடுதல், பள்ளி மாணவ மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள பாடைகட்டி மாரியம்மன் திருக்கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சி திருவாரூர் வடக்கு மாவட்ட தலைவர் ராஜூவ் தலைமையில் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில தலைவர் கோ.ஆலயமணி கலந்து கொண்டார்.
தொடர்ந்து வலங்கைமான் பாடை கட்டி மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்கள், திருக்கோவில் பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பா.நரசிம்மன் மாநில இளைஞரணி துணை செயலாளர்,க.அப்பு வலங்கைமான் ஒன்றிய செயலாளர், எம்.எம்.சண்முகவேல் மாவட்ட துணைச் செயலாளர், மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.















