நாகையில் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தையே திருட முயற்சி செய்ததால் ஓட்டுனர்கள் அதிர்ச்சி ; சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்
இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை திருடிச் செல்வதை நாம் பார்த்திருப்போம் ஆனால் நாகப்பட்டினத்தில் அரசு பேருந்தையே ஒரு நபர் திருடன் முயற்சி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் அரசு விரைவு பேருந்து நள்ளிரவு பயணத்திற்காக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சாவியுடன் பேருந்தை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றிருந்தனர். இந்த நிலையில் சாவியுடன் பேருந்து காலியாக இருந்ததை உணர்ந்த ஒரு நபர் அரசு ஓட்டுநர் போல அவர்களுடைய நிறத்தில் சட்டை அணிந்து பேருந்தை ஸ்டார்ட் செய்து நகர்த்தியுள்ளார். இதனை தூரத்திலிருந்து பார்த்த அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஓடிவந்து பேருந்து நிறுத்தி உள்ளனர். பின்னர் அங்கிருந்த சக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்தில் ஏறி அவரை கையும் களவுமாக பிடித்தனர். மது போதையில் தள்ளாடிய அந்த நபரை பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்திய போது அந்த நபர் தான் ஓட்டுனர் என்றும் பின்னர் ஒப்பந்த அடிப்படையில் ஆன ஓட்டுனர் என்றும் சமாளித்து குடிபோதையில் உளறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். நாகப்பட்டினத்தில் அரசு பேருந்தை அவர் திருடுவதற்கு முயன்றாரா அல்லது குடிபோதையில் பேருந்தை ஓட்ட முன் வந்தாரா? போன்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

















