சென்னை மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புழல் சைக்கிள் ஷாப் பகுதியில், சாலையின் அடியில் சென்ற குடிநீர் ராட்சச குழாய் உடைந்ததால் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புழல் நீர்த்தேக்கத்திலிருந்து சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில், இந்த சாலையின் அடிப்பகுதியில் பெரிய அளவிலான குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில், சாலையின் அடியில் சென்ற குடிநீர் குழாய் திடீரென உடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முதலில் சாலை உள்வாங்கத் தொடங்கிய நிலையில், காலை நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் சுமார் 10 அடி ஆழம் மற்றும் 30 அடி நீளத்தில் மிகப்பெரிய ராட்சச பள்ளம் ஏற்பட்டுள்ளது.
குழாய் உடைப்பால் ஏற்பட்ட நீரின் அழுத்தம் காரணமாக, சுற்றுவட்டாரத்தில் உள்ள தார் சாலைகளும் உயர்ந்து வெடித்து, தேசிய நெடுஞ்சாலை மற்றும் அருகில் அமைந்துள்ள சர்வீஸ் சாலை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
புழல் சைக்கிள் ஷாப் பகுதி வழியாக தினந்தோறும் ஏராளமான இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் பயணித்து வருகின்றன. இது முக்கிய தேசிய நெடுஞ்சாலை என்பதால், திடீரென ஏற்பட்ட இந்த பள்ளம் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, இதுபோன்ற குழாய் உடைப்புகள் மற்றும் திடீர் பள்ளங்கள் இந்த பகுதியில் ஏற்கனவே பலமுறை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குழாய் உடையும் போது அதிக அழுத்தத்தில் வெளியேறும் தண்ணீர், சாலையின் அடிப்பகுதியில் உள்ள மண்ணை அரித்து வெளியேற்றுவதால், பெரிய அளவில் சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனால், எப்போது, எந்த இடத்தில் சாலை திடீரென உள்வாங்கும் என்ற அச்சத்துடன் வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் பயணித்து வருகின்றனர்.
தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, சேதமடைந்த குடிநீர் குழாயை சரிசெய்யும் பணிகளும், சாலையை சீரமைக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து இதுபோன்ற திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துகள் நிகழும் முன்பாக, சாலையின் அடியில் உள்ள குடிநீர் குழாய்களை முழுமையாக ஆய்வு செய்து, நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















