திருவாரூர் மாவட்டத்தில் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து தனியார் மது கடைகளுக்கு படையெடுத்த மது பிரியர்கள் – தனியார் மது கடையிலும் ஸ்டாக் தீர்ந்ததையடுத்து தனியார் மது கடைகளை பூட்டிய ஊழியர்கள் – சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று மது வாங்கிய மது பிரியர்களால் பரபரப்பு
காலி மது பாட்டில்களை திரும்ப பெற டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைத்து டாஸ்மாக் அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அவதி அடைந்த மது பிரியர்கள் தனியார் மதுபான கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர். எதிர்பாராத இந்தக் கட்டுக்கடங்காத கூட்டத்தால் தனியார் மதுபான கடைகளில் பரபரப்பான சூழல் நிலவியது. சில மணி நேரங்களிலேயே தனியார் மதுபான கடைகளில் உள்ள அனைத்து மதுபுட்டிகளும் விற்றுத் தீர்ந்தன. இதனால் தனியார் மதுபான கடைகளும் பூட்டு போட்டு அடைக்கப்பட்டன. இருந்த போதும், மது வாங்கிவிட்டு தான் அங்கிருந்து புறப்படும் எண்ணத்தோடு 200க்கும் மேற்பட்ட மது பிரியர்கள் தனியார் மதுபான கடையினை முற்றுகையிட்டனர்.
200க்கும் மேற்பட்ட மது பிரியர்கள் திருவாரூர் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் மதுக்கடையை நோக்கி படையெடுத்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலான மது பிரியர்கள் சாலையிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒரு சில ஆர்வமிக்க மது பிரியர்கள், மதுபான கடையில் உள்ள கேட்டில் எகிறி குதித்து உள்ளே சென்றனர். இன்னும் சிலரோ மதுபான கடையின் அருகே உள்ள மரத்தின் மீது ஏறி, மதுபான கடை சுவரில் தாவி உள்ளே சென்று மது வாங்கினர்.
பூட்டப்பட்ட மதுக்கடையில் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று மது வாங்கி சென்ற மது பிரியர்களால் திருவாரூரில் பரபரப்பு நிலவியது













