புழல் சிறைச்சாலையில் 1 மணி நேரம் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய். புழல் காவல் நிலையத்திலும் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு. சமூகநல விடுதியில் ஆய்வு எனக் கூறி வராததால் மாணவர்கள் ஏமாற்றம்.
சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000 மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் திடீரென இன்று புழல் மத்திய சிறைச்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். புழல் சிறைச்சாலையில் தண்டனை பிரிவில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டு கைதிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் உள்ளிட்ட அதிகாரிகள் சிறை வளாகத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து முதலமைச்சர் விஜய்யிடம் எடுத்துரைத்தனர். தொடர்ந்து சிறை வளாகத்தில் கைதிகளுக்கு உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். சுமார் 1 மணி நேரம் ஆய்வு முடித்து பின்னர் சென்னை புறப்பட்டு செல்லும் வழியில் சிறைக்கு அருகே உள்ள புழல் காவல் நிலையத்திலும் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்திற்குள் நேராகச் சென்ற முதலமைச்சர் விஜய் ஆய்வாளர் வசந்த் ராஜாவை அவரது இருக்கையில் அமர வைத்து பின்னர், ஆய்வாளருக்கு எதிரே பார்வையாளர் இருக்கையில் அமர்ந்து காவல் நிலையத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து ஆய்வாளரிடம் கேட்டறிந்தார். புகார்தாரர்கள் அளிக்கும் புகார்களை பெற்று என்ன செய்கிறீர்கள் என ஆய்வாளரிடம் கேட்டு, புகாரைப் பெற்று காலதாமதம் இன்றி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். கணினி அறை, கைதிகளின் அறைகளை பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், பார்வையாளர்களுக்கான இருக்கைகள் கழிப்பறை, குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்றும் கேட்டறிந்தார். கண்காணிப்பு கேமரா லஞ்சம் வாங்குவது குற்றம் உள்ளிட்ட அறிவிப்பு வாசகங்கள் குறித்து கேட்டு அறிந்த முதலமைச்சர் விஜய் புகார்தாரர்களை அலைக்கழிக்காமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். முதலமைச்சர் விஜய் காவல் நிலையத்திற்குள் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு நிலவியது. இதனிடையே சிறைச்சாலை வாயில் மற்றும் காவல் நிலைய வாயிலில் முதலமைச்சர் விஜய் பார்ப்பதற்காக ஏராளமானோர் திரண்டு நின்று உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். முன்னதாக முதலமைச்சர் விஜய் செங்குன்றம் அருகே வடகறையில் அமைந்துள்ள சமூக நல விடுதியில் ஆய்வு மேற்கொள்வதாக கூறி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் முதலமைச்சர் ஆய்வு ரத்து செய்யப்பட்டதால் முதலமைச்சரை காண்பதற்காக ஆர்வமாக இருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.















