சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருவாலி ஊராட்சியில், கடந்த 10 ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் குளத்தைத் தூர்வாரித் தரக்கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட திருவாலி ஊராட்சி காளியம்மன் கோவில் தெருவில் பழமை வாய்ந்த பொதுக்குளம் ஒன்று அமைந்துள்ளது. பல தலைமுறைகளாக இப்பகுதி மக்களின் முக்கியக் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களுக்கான பாசன நீர் ஆதாரமாகவும், கால்நடைகளுக்கான பயன்பாட்டிற்கும் இக்குளம் விளங்கி வந்தது.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இக்குளம் தூர்வாரப்படாமல் தூர்ந்துபோய், பயன்பாடற்ற நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் குளத்தின் சுற்றுப்பகுதிகள் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகி, அகலமும் நீளமும் சுருங்கி பாழடைந்துள்ளது.
மேலும், குளம் வறண்டு கிடப்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, பொதுக் கைப்பம்புகள் (Hand Pump) அனைத்தும் வறண்டு போயின. இதனால் பொதுமக்களும், விவசாயப் பெருமக்களும் கடுமையான குடிநீர் மற்றும் பாசனப் பற்றாக்குறையால் அன்றாடம் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் பலமுறை முறையிட்டும், மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனிடையே மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து மனு அளித்தனர்.
இக்குளத்தை ஆய்வு செய்து உடனடியாகத் தூர்வாரி ஆழப்படுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றிப் புதுப்பித்துத் தரவும் கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.















