நாகப்பட்டினத்தில் குப்பைக் கிடங்குப் புகையால் பொதுமக்கள் அவதி: ஆட்சியரிடம் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு மனு!
நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட மேல கோட்டைவாசல் பகுதியில் இயங்கி வரும் நகராட்சி குப்பைக் கிடங்கில் தொடர்ச்சியாக திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் பெரும் காற்று மாசுபாடு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
’வீ தி லீடர்ஸ்’ (WE THE LEADERS) அமைப்பின் சார்பாக ஆறுமுகம் என்பவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரிடம் இந்த மனுவை அளித்துள்ளார்.
மேல கோட்டைவாசல் குப்பைக் கிடங்கைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட தெருக்களில் வசிக்கும் 10,000-க்கும் அதிகமான பொதுமக்கள் நாள்தோறும் அடர்ந்த புகை மற்றும் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நுரையீரல் சார்ந்த நோய்களுக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தின் முக்கிய நுழைவாயிலான மேல கோட்டைவாசல் சாலையை நாள்தோறும் 1,00,000-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர். புகையின் காரணமாகப் பார்வைத் திறன் குறைந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
குப்பைகளை அறிவியல் பூர்வமாகத் தரம் பிரிக்க நவீன இயந்திரங்கள் இல்லாத நிலையில், 2023-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கட்டடம் பயன்பாடின்றி இடிந்த நிலையில் உள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே திறந்தவெளியில் குப்பை எரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
நவீன இயந்திரங்கள் மூலம் கழிவுகளைத் தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய நிரந்தர உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
பயன்பாடின்றி வீணாகியுள்ள நகராட்சி கட்டடம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சுமார் 30 ஆண்டுகளாக நீடிக்கும் இந்தப் பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து தலையிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.













