திருவாரூர் அருகே சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், மாணவிகளுக்காக தயாரிக்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை சோதித்தார். தொடர்ந்து மாணவிகள் முதல்வர் விஜய் திருவாரூர் வரவேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
திருவாரூர் அருகே கிடாரம்கொண்டான் பகுதியில் உள்ள சமூக நல விடுதியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார் . இந்த ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் பங்கேற்றார்.
திடீர் ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் சம்பத் குமார் சமூக நீதி விடுதியில் உள்ள நூலகம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தினை பார்வையிட்டார். அப்போது மாணவிகள் டிஎன்பிஎஸ்சி, யூ பி எஸ் சி, ரயில்வே துறைக்கான போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக அமைச்சர் சம்பத் குமார், அதனை பெற்று தர நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவிகளுக்கான குளியலறை மற்றும் கழிப்பிடம் ஆகியவை தூய்மையாக உள்ளதா என ஆய்வு செய்தார்.
தண்ணீர் குழாய்களில் தண்ணீர் வருகிறதா? கதவுகளில் முறையாக தாழ்ப்பாள் வசதி இருக்கிறதா என ஒவ்வொன்றாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சமூக நீதி விடுதியில் சுமார் 75க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ள நிலையில் கழிவறை குளியலறை வசதி நான்கு மட்டுமே உள்ளதால் கூடுதலாக கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் மாணவிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதே போன்று விடுதியில் வைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவிகளுக்காக தயாரிக்கப்பட்ட மதிய உணவை தானே எடுத்து சாப்பிட்டு உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார் . தொடர்ந்து மாணவிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு புறப்பட்டார் .
ஆய்வை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்ட அமைச்சர் சம்பத் குமாரை மாணவிகள் அழைத்தவுடன் உடனடியாக காரில் இருந்து இறங்கிய அமைச்சர் அவர்கள் அருகே சென்று கேட்டபோது…
அப்போது மாணவிகள் தங்களது அண்ணனான தமிழகம் முதல்வர் விஜய் திருவாரூர் வரவேண்டும் அவரை நாங்கள் நேரில் பார்க்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு சிரித்துக் கொண்டே அமைச்சர் ஏற்பாடு செய்வதாக மாணவிகளிடம் உறுதியளித்தார்.













