ஓய்வு பெற்ற பின்னரும், ஏழை குழந்தைகள் விளையாட்டு பயிற்சிக்காக ஓயாமல் உழைத்து வரும் உடற்கல்வி ஆசிரியர், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சி அளித்து, நோயை கட்டுப்படுத்தும் முறையை கடைப்பிடிப்பதால், நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெருமளவு குணமடைந்து வருகின்றனர், இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் செழியன். 30 ஆண்டுகள் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். உழைப்பதற்கு ஓய்வு இல்லை என்பதற்கு இலக்கணமாக, பகல் நேரத்தில் தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருவதுடன், காலை மாலை ஆகிய இரண்டு வேலைகள் மயிலாடுதுறையில் அமைந்துள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில், நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் சிறுவர் சிறுமியருக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் சேவை மனப்பான்மையில், கால்பந்து பயிற்சி, கபடி, ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஈட்டு எறிதல் உள்ளிட்ட தடகள பயிற்சிகள், இறகு பந்து மேசைப்பந்து உள்ளிட்ட உள்அரங்கு விளையாட்டு பயிற்சிகள் அளித்து வருகிறார். இரு சக்கர வாகனம் எதையும் பயன்படுத்தாமல் எளிமையான முறையில் சைக்கிளில் வீட்டிலிருந்து கிளம்பி விளையாட்டு மைதானத்திற்கு வரும் உடற்கல்வி ஆசிரியர் செழியன், காலை மாலை இருவேளையிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் தனது உடல் மனம் ஆகியவை புத்துணர்வாக உணர முடிவதாக தெரிவிக்கின்றார். இவரிடம் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் விளையாட்டில் ஈடுபடுவது காரணமாக செல்போன் பார்க்கும் நேரம் குறைகிறது என்றும், இதனால் உடல் வலிமை பெறுவதுடன், மனநலம் சார்ந்த பிரச்சினைகளிலும் தீர்வு ஏற்படுவதாக தெரிவிக்கின்றார். சிறிது தொலைவு பயணம் செய்வதற்கு அனைவரும் மிதிவண்டியை பயன்படுத்தினால், உடற்பயிற்சி செய்வது போல ஆகும், பொருளாதாரம் சார்ந்த சிக்கன நடவடிக்கையாக அமையும் என்று தெரிவிக்கும் செழியன், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியர், மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பயிற்சியில் பங்கேற்றுள்ளதாகவும், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நரம்புத் தளர்வு ஏற்பட்டு தங்கள் வேலைகளை தாங்களே செய்ய முடியாத நிலையில் அடுத்தவர் உதவியை எதிர்பார்த்து இருக்க வேண்டியது அவசியமானது. ஆனால் கால்பந்து உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடும் பொழுது அவர்களுக்கு உடலளவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, தங்களது தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு தயாராகி வருவதாகவும், இது ஒரு சிகிச்சை முறையாகவே பார்க்கப்பட வேண்டும் என்று கூறுகின்றார். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட அபராஜிதன் என்ற சிறுவன் தெரிவிக்கும் பொழுது பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு தனக்கு மிகுந்த சிரமம் இருந்ததாகவும் தற்பொழுது தன் வேலைகளை தானே செய்யும் அளவிற்கு ஆசிரியரின் பயிற்சியால் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.எனக்கு ஆசிரியரை மிகவும் பிடிக்கும் என்று தனது மழலை மொழியில் தெரிவித்தான். தன்னலம் பாராது ஏழை குழந்தைகளுக்காக உழைக்கும் உடற்கல்வி ஆசிரியர் செழியனுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.













