திருமுல்லைவாசலில் செல்ல காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா! 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில், அருள்மிகு செல்ல காளியம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
திருமுல்லைவாசல் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 4-வது வெள்ளிக்கிழமையன்று தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி காப்புக்கட்டுதலுடன் விமரிசையாகத் தொடங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வீதி உலா நிகழ்வுகளும் நடைபெற்று வந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான 10-ஆம் நாள் தீமிதி திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக, விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவில் எதிரே அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி பக்தியுடன் தீமிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
இந்தத் தீமிதித் திருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய நிலையில், திருமுல்லைவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வருகை தந்த 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அம்மனைத் தரிசித்து அருள் பெற்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளைத் திருமுல்லைவாசல் கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.













