திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு -மண் திருட்டு நடைபெற்றதை கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்.
திருவாரூர் மாவட்டம் வைப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வைப்பூர் சோழநகர் பகுதியில் சட்டவிரோதமாக டிப்பர் டிராக்டர்களிலும், டாரஸ் லாரிகளிலும் மண் திருட்டு நடைபெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தஞ்சாவூர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் (திருவாரூர் மாவட்ட பொறுப்பு) பாலமுருகன் மற்றும் திருவாரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் ஜனனி ஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மணல் திருடி சென்ற டாரஸ் லாரிகளையும், டிப்பர் டாக்டர்களையும் கையும் களவுமாக பிடித்து வைப்பூர் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் உதவியுடன் திருடி சென்ற மண்ணுடன் டிராக்டரையும் லாரியையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இரண்டு வாகனங்களின் ஓட்டுனர்களும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அங்கு அனுமதி இல்லாமல் மண் திருடியது யார்? இதுவரை எவ்வளவு மண் திருடி உள்ளார்கள்?அந்த மண் எங்கு பயன்படுத்தப்பட்டது..? என்பது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மண் மற்றும் மணல் திருட்டு அதிகம் நடைபெறுவதாகவும், ஆனால் இது குறித்து காவல்துறையினரோ புவியியல் மற்றும் சுரங்கத் துறையினரோ சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக பெயருக்கு மட்டும் மண் திருட்டு பிடிபடுகிறது என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்













