கஞ்சா நகரம் கிராமத்தில் பிடாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பத்தாம் ஆண்டு பால்குடம் திருவிழா. வழி நெடுகிலும் பால்குடம் தூக்கி வந்த பெண்கள் அருள் வந்து ஆடியது பக்தர்களிடையே பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் கீழ தெருவில் அருள்மிகு ஸ்ரீ பிடாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பத்தாம் ஆண்டு பால்குட பெருவிழா நடைபெற்றது. காவிரி கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டது. விரதம் இருந்த பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம் எடுத்து சக்தி கரகத்துடன் மேளதாள வாத்தியங்கள் வான வேடிக்கை முழங்க ஊர்வலமாக கிராமத்தின் பல்வேறு வீதிகளின் வழியாக ஆலயம் வந்தடைந்தனர். வழி நெடுகிலும் பால் குடத்திற்கு வரவேற்பு தெரிவித்து பொதுமக்கள் வீதிகளில் கோலமிட்டு சக்தி கரகத்திற்கு தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். இந்த பால்குடம் வீதியுலாவில் பால்குடம் சுமந்து வந்த பெண்கள் பலர் வழிநெடுகிலும் அருள் வந்து பக்தி பரவசத்தில் நடனம் ஆடியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து ஆலயத்தில் பக்தர்கள் கொண்டு வந்த பால் மற்றும் பல்வேறு திரவியங்களால் பிடாரி அம்மனுக்கு அபிஷேகம் செய்து மகாதீபாரதனை நடைபெற்றது. விழாவை கிராமத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.













