மயிலாடுதுறையில் பிரதமரின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாஜக சார்பில் ஆன்லைன் மூலம் புகார் மனு அளிக்கப்பட்டது :-
மயிலாடுதுறை கிட்டப்பங்காடி பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் பிரதமரின் உருவபொம்மை எரிப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னறிவிப்பின்றி இரவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். உடனடியாக மயிலாடுதுறை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பிரதமரை போராட்டக்காரர்கள் அவமரியாதை செய்ததாக குற்றம்சாட்டி மயிலாடுதுறை பாஜக முன்னாள் மாவட்ட துணைத் தலைவரும், தூய்மை இந்தியா ஒருங்கிணைப்பாளருமான மோடி கண்ணன் இன்று ஆன்லைன் வாயிலாக தமிழக ஆளுநர் , முதலமைச்சர் தனிப்பிரிவு , மாவட்ட எஸ்பி மற்றும் மயிலாடுதுறை இன்ஸ்பெக்டருக்கு புகார் மனு அளித்தார். மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் விதமாகவும் தேச விரோத செயல்களில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார். உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தீப்பந்தம் ஏந்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கு எதிராக பாஜக சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில் கண்டன போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இதில் பாஜக மாவட்ட துணை தலைவர் கோமல் வினோத், ஓ பி சி அணி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தங்க சரவணன், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் அருள்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.













