மயிலாடுதுறையில் சட்டவிரோத மணல் கொள்ளை அம்பலம்..! 2 ஏக்கரில் விதிமீறல் – ரூ.49 லட்சம் அபராதம்..!
மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நூற்றுக்கணக்கான மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக சமூகநல ஆர்வலர் ஷங்கமித்திரன், ஆதாரங்களுடன் கடந்த ஜூன் 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் புகார் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவின் அடிப்படையில், ஜூன் 16ஆம் தேதி கிடங்கல் கிராமத்தில் உள்ள மணல் குவாரியை நேரில் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி சுரங்கத்துறை அதிகாரிகள், சர்வேயர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் குவாரியில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில், அனுமதி வழங்கப்பட்ட பகுதிக்கு அப்பால் கூடுதலாக 2 ஏக்கர் பரப்பளவில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அனுமதிக்கப்பட்ட 5 அடி ஆழத்திற்கு பதிலாக 25 அடிக்கும் மேல் மணல் தோண்டப்பட்டிருந்ததும், ஆய்வுக்கு முன்பாக பள்ளங்களை அவசர அவசரமாக மூடி மறைக்க முயற்சித்திருந்ததும் அதிகாரிகள் ஆய்வில் அம்பலமானது.
இதுகுறித்த முழுமையான அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக அந்த மணல் குவாரியை மூட உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக, விதிமீறல்களுக்கு ரூ.49 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோன்ற முறைகேடுகள் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு மணல் குவாரிகளிலும் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அனைத்து குவாரிகளிலும் விரிவான ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.













