மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி செய்து தகாத வார்த்தைகளால் பேசிய திமுக மாவட்ட துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் காவல்துறையில் புகார் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஜிவிஎம் நகரில் ரேவதி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் தியாகராஜன் வருவாய் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்கள் பட்டமங்கலம் ஊராட்சியில் திருவள்ளுவர் தெருவில், கடந்த 2011ம் ஆண்டு ஆயிரம் சதுர அடி நிலத்தை ஜெயலக்ஷ்மி என்பவரிடம் கிரயமாக வாங்கி உள்ளார். இதே பட்டமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த, திமுக மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வரும் செல்வமணி என்பவர் இந்த இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில், செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. மொத்தமுள்ள பத்தாயிரம் சதுர அடி நிலத்தில் ஆயிரம் சதுர அடி நிலம் மட்டுமே ரேவதி கிரயம் பெற்றுள்ள நிலத்தில், அளந்து சர்வே கல் போடுவதற்கு செல்வமணி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் இன்று பட்டமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் முகாமில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி பூங்கொடி பிரச்சனைக்குரிய நிலத்தை பார்வையிட்டுள்ளார், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக மாவட்ட துணை செயலாளர் செல்வமணி, தகாத வார்த்தைகளால் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடியை தகாத வார்த்தைகள் கூறி திட்டியதுடன், தாக்க முயற்சி செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து வருவாய் அலுவலர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கவனத்திற்கு கொண்டு சென்றார், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் பேரில் பட்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் செல்வமணி மீது புகார் அளித்துள்ளார் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.













