தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டித்தும், தன்னெழுச்சியாக போராடும் விவசாயிகளின் போராட்டத்தை எதிர்க்கட்சி தூண்டுவதாக மடைமாற்றும் அமைச்சர்களை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்:-
தமிழக அரசு விவசாயிகளின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் ரூபாய் 70 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு 100% தள்ளுபடியும் 70 ஆயிரத்திற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி என்று இரண்டாவது முறையாக கடன் தள்ளுபடி மாற்றி அறிவித்தது. இதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலாலேயே விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக அமைச்சர்கள் தெரிவித்து விவசாயிகளின் நியாயமான போராட்டத்தை மடைமாற்றி திசை திருப்புவதாக கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலக வாயிலில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதியின் படி விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், தன்னெழுச்சியாக போராடும் விவசாயிகளின் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டுவதாக அமைச்சர்கள் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டால் விவசாயிகள் தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் எச்சரித்தனர்.













