மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு , குத்தாலம் போலீசார் விசாரணை :-
மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அன்பு வீரன் (56). திருமணமாகி இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் இன்று அதிகாலை தனது வயலில் தண்ணீர் பாய்ச்ச மின்கம்பத்தில் இருந்த போர் சுவிட்சை போடுவதற்காக தனது வயலுக்கு அருகே சென்றுள்ளார். அப்போது மின்கம்பத்தில் இருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் விவசாயின் மீது பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே அருகே உள்ள வயலின் உரிமையாளர் தீபக் வந்து பார்த்தபோது மின்கம்பத்திலிருந்து தீப்பொறி வந்துள்ளது. உடனடியாக அங்கு விழுந்து கிடந்த விவசாயி அன்பு வீரனை மீட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீர் செய்யும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.















