சமயநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விஷமத்தனத்தை முறியடிக்க வேண்டிய கடமை தமிழக மக்கள் அனைவருக்கு உள்ளது
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேட்டி
மயிலாடுதுறை அருகே கிளியனூருக்கு நேற்று வருகை புரிந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறுகையில்
திருவள்ளுவருக்கு காவி நிறம் அணிவித்து அவரை மத அடையாளத்திற்குள் சுருக்கி வைக்கக்கூடிய ஒரு முயற்சி தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு பெரியோர்களும், சான்றோர்களும் ஒரு நல்லிணக்கம் தழைக்கக்கூடிய ஒரு பூமியாகத்தான் தமிழகத்தை வடிவமைத்து தந்திருக்கிறார்கள். அதை சீர்குலைக்கும் விதமாக ஒரு சில விஷமிகள் செய்யக்கூடிய இது போன்ற நிகழ்வுகளை புறந்தள்ளிவிட்டு, நம்முடைய பணிகளிலே நாம் கவனம் செலுத்துவதுதான் இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்கும் சமய நல்லிணக்கத்திற்கும் நாம் செய்யக்கூடிய செயலாக இருக்கும். சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கக்கூடிய வகையிலே, மதப் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தக்கூடிய வகையிலே, நல்லிணக்கத்தைக் குறைக்கக்கூடிய வகையிலே யார் இதைச் செய்திருந்தாலும் அதை தவிர்க்கப்பட வேண்டியது, அந்த விஷமத்தனத்தை முறியடிக்க வேண்டிய கடமை தமிழக மக்களாகிய நம்ம அனைவருக்குமே இருக்கிறது.திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக எந்த செயலையும்
நாங்கள் அனுமதிக்க மாட்டோம். முன்பு இருந்த அரசு எதைப் பின்பற்றியதோ, அதே நடைமுறையும் பின்பற்றப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ஒருசில நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார். நிச்சயமாக அங்கே சமய நல்லிணக்கம் தழைக்கக்கூடிய வகையிலே அந்த முடிவுகள் எடுக்கப்படும். இன்னும் சொல்லப்போனால் திருப்பரங்குன்றத்தைப் பொறுத்தவரைக்கும் அந்த சட்டமன்றத் தொகுதியிலே இது போன்ற விஷமிகளின் விஷமப் பிரச்சாரத்தை முறியடித்து, தவெக மிகப்பெரிய வெற்றியை அந்தத் தொகுதியிலே பெற்றிருக்கிறது. இந்த விஷமப் பிரச்சாரத்தைச் செய்த பாஜக அணியினர் 19 சதவீகத்திற்கு கீழ்தான் வாக்குகள் வாங்கியுள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் புதியகட்சி தொடங்கலாம் புதிய கட்சி தொடங்கியுள்ள அண்ணாமலைக்கு வாழ்த்துதெரிவித்துகொள்கிறேன். அவருக்கு மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை வரக்கூடிய காலம் தான் உணர்த்தும். மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இல்லை அணை திறப்பது குறித்து ஒருசில நாட்களி அரசு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடும் என்றார்.














