இளம் பெண் மீது தடியடி தாக்குதல்:-இளம் பெண் பலத்த காயம் ;- தலைமை காவலர் மீது நடவடிக்கை கோரி எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கரியன் தெரு ரோசனைபட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவரது கணவர் சபரீஷ்வரன் வெல்டிங் தொழிலில் செய்து வருகிறார். கடந்த 16ஆம் தேதி மாலை 5 மணி அளவில், தேவி தனது கைக்குழந்தையுடன் வீட்டருகே உள்ள திண்டிவனம் தீர்த்தக்குளம் பகுதியில் நடைபெற்று வந்த அங்காளம்மன் கோவில் மயானக் கொள்ளை நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தார்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பிரம்மதேசம் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் அன்புமணி, பொதுமக்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தேவி சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென அவர் மீது தடியால் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தலை, கை, கால், முதுகு உள்ளிட்ட பல இடங்களில் தாக்கப்பட்டதால் தேவி கீழே சரிந்து விழுந்து மயக்கமுற்றார்.இதையடுத்து அங்கு இருந்த பொதுமக்கள், தேவியை உடனடியாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. இடது காலில் ஜவ்வு கிழிந்துள்ளதாகவும், உடலின் பல இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், குறைந்தது மூன்று மாதங்கள் நடப்பது சிரமமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக, தேவியும் அவரது உறவினர்களும் இன்று காலை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று, எஸ்பி சாய் பிரனீத் மற்றும் கூடுதல் எஸ்பி தினகரனை நேரில் சந்தித்து, சம்பந்தப்பட்ட தலைமை காவலர் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.பெண் ஒருவர் மீது காவலர் கடுமையான தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இந்த சம்பவம், விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















