தமிழகத்தில் கஞ்சா இல்லை என கூறவில்லை, ஆனால், கஞ்சா பயிரிடப்படவில்லை எனவும், முந்தைய ஆட்சியில் கஞ்சா பயிரிடப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பைக் பேரணியை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூரில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் பைக் பேரணி திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ரஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், திரைப்பட நடிகர் ஆர்யா ஆகியோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு பிரச்சாரம் இரு சக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்து பின்னர் பேரணியில் பங்கேற்று இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றார். இந்த விழிப்புணர்வு பரப்புரை பாதசாரிகள், மிதிவண்டி ஓட்டுநர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி சாலையில் தொடங்கி பேரணியில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு இரு சக்கர வாகனங்களில் திருவள்ளூரின் முக்கிய வீதிகளின் வழியாக ஓட்டி சென்று மணவாளநகர் இந்திராகாந்தி சிலை வழியாக சுற்றி சென்று சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் சாலை விதிகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை இளைஞர்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர். மா.சுப்ரமணியன், பான்பராக் போன்ற போதை வஸ்துகளுக்கு கர்நாடகா போன்ற மாநிலங்களில் தடையில்லை என்றும், தமிழ்நாட்டில் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பான்பராக், குட்கா பொருட்கள் குட்கா பொருட்கள் கர்நாடகா எல்லையில் இருந்து எளிதாக உள்ளே வருகின்றன எனவும், அவற்றை காவல் துறையினர் தடுத்து வருகின்றனர் எனவும், காய்கறி, பழங்கள், பூக்கூடைகளில் மறைத்து எடுத்து வருகின்றனர் எனவும், தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது ஜீரோ கல்டிவேஷன் எனவும், கஞ்சா இல்லை என கூறவில்லை எனவும், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருவதை முடிந்தளவு காவல் துறையினர் தடுத்து வருகின்றனர் எனவும், விற்பனை செய்வோரை குண்டாசில் கைது செய்து சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார். முந்தைய ஆட்சியில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தது, இப்போது அது ஜீரோ எனவும், மலைப்பகுதிகளில் ஒரு தொழிலாக செய்து வந்தனர்; இப்போது இல்லை என்பதை திரும்ப திரும்ப கூறி வருகிறேன் எனவும் அவர் தெரிவித்தார். பறவை காய்ச்சல் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் சென்றார்.















