தமிழ்நாடு முழுவதும் அவசரகாலத் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கில், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஒரு முக்கிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளன. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் மாரடைப்பு (SCA) ஏற்படும் சமயங்களில், உடனடியாக உயிர் காக்கும் சிகிச்சையை வழங்கக்கூடிய ‘தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர்’ (Automated External Defibrillator – AED) கருவி நிறுவப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தையும், அலுவலகப் பணியாளர்களுக்கான விரிவான செயல்முறைப் பயிற்சி முகாமையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார்.
மாரடைப்பு ஏற்படும் தருணங்களில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு மனிதனின் உயிர் பிழைக்கும் வாய்ப்பைத் தீர்மானிக்கிறது. இந்த AED கருவியானது கையடக்கமானது மற்றும் மிக எளிதாகப் பயன்படுத்தக்கூடியது. இது மாரடைப்பின் போது இதயம் சீரற்ற முறையில் துடிப்பதை மின் அதிர்ச்சி மூலம் சரிசெய்து, சாதாரண இதயத் துடிப்பை மீட்டெடுக்க உதவுகிறது. இக்கருவியின் சிறப்பம்சமே, மருத்துவப் பயிற்சி பெறாத சாமானியர்கள் கூட இதிலுள்ள எளிய குரல் வழி வழிமுறைகளைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இயக்க முடியும் என்பதாகும். எனவே, அரசு அலுவலகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இக்கருவி இருப்பது அவசியமாகிறது.
டாக்டர் சுபாஷ் சந்திரனால் கருத்தாக்கம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தை, மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் அவசரகால மருத்துவத் துறை இயக்குநர் மற்றும் தலைவர் டாக்டர் நரேந்திர நாத் ஜெனா மற்றும் விபத்து மற்றும் அவசரகாலத் துறை இணை ஆலோசகர் டாக்டர் எஸ். பிரபு ஆகியோர் முன்னின்று செயல்படுத்தினர். இத்திட்டத்தின் நிர்வாகப் பணிகளைப் பொது மேலாளர் எஸ். சிவகுமார் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவர் பி.சுந்தர்ராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இந்தப் பயிற்சியின் போது, மருத்துவ உதவி வரும் வரை அவசரகாலச் சூழலில் எவ்வாறு நம்பிக்கையுடன் செயல்படுவது என்பது குறித்து மாதிரிப் பயிற்சிகள் மற்றும் நேரடிச் செயல்விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இந்த விழிப்புணர்வு முயற்சியைப் பாராட்டிய மாவட்ட ஆட்சியர் செ.சரவணன், உயிர்களைக் காப்பாற்றுவதில் பொது விழிப்புணர்வும், தயார்நிலையும் மிக முக்கியம் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், துணை ஆட்சியர் (பயிற்சி) மு.ராஜேஸ்வரி சுவி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ர.கீர்த்தனா மணி, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ஜெ.ஸ்ரீசரவணன் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பான பொது இடங்களை உருவாக்குவதற்கும், மருத்துவ அவசரநிலைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் சமூகத்தை உருவாக்குவதற்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை எடுத்து வரும் இத்தகைய முயற்சிகள் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளன.

















