சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையம் முன்பு காணாமல் போன பெண்ணிற்கு உறவினர்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மருவத்தூர் கிராமத்தை சேர்ந்த சாருபிரியா (25) என்பவரை காணவில்லை என்று கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் செய்துள்ளனர். இதனிடையே இன்று சாருபிரியாவின் உறவினர்கள் வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையம் முன்பு மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தின் போது மாயமான சாரு பிரியாவை கண்டுபிடித்து தர வேண்டும். புகார் கொடுத்து மூன்று நாட்களாகியும் நடவடிக்கை எடுக்காத வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தை கண்டித்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை, கொள்ளிடம் காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டனர். அப்பொழுது சாருபிரியாவின் பாட்டி மறைத்து வைத்திருந்தத மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்ற முற்பட்டார். அப்பொழுது சுதாரித்துக் கொண்ட போலீசார் அவரிடம் இருந்து மண்ணெணியை பிடுங்கி அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.














