பிரபல இசையமைப்பாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான இளையராஜா தாக்கல் செய்த வழக்கில், சோனி மியூசிக் நிறுவனம் தனது பாடல்களை பயன்படுத்தி ஈட்டிய வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளையராஜா, தாம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 7,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்ததாகவும், அவை அனைத்தும் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டவை என்றும், அந்த உரிமைகள் யாருக்கும் மாற்றப்படவில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் சோனி மியூசிக் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள், தனது அனுமதி இல்லாமல் பாடல்களை மாற்றியமைத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
இசையமைப்பாளர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், “சோனி நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் மற்றும் ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பெயரில் பாடல்களை தவறாகப் பயன்படுத்தி வருவாய் ஈட்டி வருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.
இதனை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், சோனி நிறுவனம் இளையராஜா பாடல்களை பயன்படுத்தி பெற்ற வருமான விவரங்களையும், வரவு-செலவு கணக்குகளையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை அக்டோபர் 22-க்கு ஒத்திவைக்கப்பட்டது.