சென்னை :
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சத்யஜோதி நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இச்சங்கம் 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து இயக்குனரும், தயாரிப்பாளருமான பாரதிராஜா தலைவர் பதவியில் இருந்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளாக தலைவராக பணியாற்றிய அவருக்கு, உடல் நலமும் வயதானதாலும் தொடர்ந்து பதவி வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 2025-28 காலக்கெடுவிற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தேர்தல் அதிகாரியாக மதிப்புக்குரிய இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் நியமிக்கப்பட்ட நிலையில், தலைவர் பதவிக்கு டி.ஜி. தியாகராஜன், துணைத் தலைவர்களாக எஸ்.ஆர். பிரபு, லலித் குமார், பொதுச் செயலாளராக அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, பொருளாளராக தனஜெயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், செயற்குழு உறுப்பினர்களாக கே.எஸ். ரவிக்குமார், சுந்தர்.சி, விக்னேஷ் சிவன், ஆர். கண்ணன், சுதன், கார்த்திக் சந்தானம் உள்ளிட்ட 10 பேர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். போட்டியின்றி புதிய நிர்வாகக் குழு அமைந்தது குறிப்பிடத்தக்கது.
சங்க விதிகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் இம்முறை 7 அலுவலக நிர்வாகிகளும், 10 செயற்குழு உறுப்பினர்களும் எதிர்ப்பின்றி தேர்வு செய்யப்பட்டு, 2025-28க்கான புதிய நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது.
















