சென்னையில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
24 மணி நேர மழைப்பொழிவு (மில்லிமீட்டரில்)
பாரிஸ் – 168.9
மடிப்பாக்கம் – 148.2
கொரட்டூர் – 142.8
நெற்குன்றம் – 138.6
நாராயணபுரம் ஏரி – 124.8
அம்பத்தூர் – 112.5
வளசரவாக்கம் – 111.6
ஒக்கியம் துரைப்பாக்கம் – 108.3
மேடவாக்கம் – 105.3
பள்ளிக்கரணை – 104.1
அய்யம்பாக்கம் – 96.9

வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த சில நாட்கள் மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அலட்சியம் மக்கள் குற்றச்சாட்டு :
கண்ணகி நகரில் தேங்கியிருந்த மழை நீரில் மின்சாரம் பாய்ந்து, தூய்மை பணியாளர் வரலட்சுமி (வயது 35) இன்று அதிகாலை உயிரிழந்தார். அவர் காலை 4.50 மணியளவில் வேலைக்கு செல்லும் போது இந்த துயரச் சம்பவம் நடந்தது.
வரலட்சுமிக்கு 12 வயது பெண் குழந்தையும், 10 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்த அவர் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர்.
கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை மேல் அபாயகரமாக இருப்பதைப் பற்றி மக்கள் பலமுறை புகார் அளித்தும், மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
“அரசின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்?” எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நிதியுதவி அறிவிப்பு
உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி குடும்பத்துக்கு, மின்சார வாரியம் சார்பில் ரூ.10 லட்சமும், தனியார் நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சமும், மொத்தம் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.















