கிரிக்கெட் விளையாடியபோது நெஞ்சுவலி – 40 வயது இளைஞர் உயிரிழப்பு.
விழுப்புரம் சித்தேரிகரை பகுதியைச் சேர்ந்த 40 வயது இளைஞர், இன்று காலை சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அஜீஸ்கான் (40), சித்தேரிகரை முத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர். இவர் துபாயில் ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊரான விழுப்புரத்திற்கு வந்திருந்தார்.இந்நிலையில், இன்று காலை சாலாமேட்டில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும், மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து அஜீஸ்கானின் உடல், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது 40 வயது இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் விழுப்புரம் சித்தேரிகரை பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
















