கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.46 லட்சம் மதிப்பிலான 260 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் காணாமல் போன செல்போன்கள் குறித்து அந்தந்த காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்களின் பேரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுமுதற்கட்டமாக ரூ.46 லட்சம் மதிப்பிலான 260 செல்போன்கள் மீட்கப்பட்டு நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரியவர்களிடம் மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் ஒப்படைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 580 செல்போன்கள் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி. மீட்கப்பட்ட அனைத்து செல்போன்களும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என எஸ்பி தெரிவித்தார்.
செல்போன் காணாமல் போனால் பொதுமக்கள் எவ்வித பதற்றமும் அடையத் தேவையில்லை. உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். காவல் நிலையத்திற்கு செல்ல முடியாதவர்கள் தமிழ்நாடு சிட்டிசன் போர்ட்டல் வாயிலாக ஆன்லைனில் புகார் பதிவு செய்யலாம் என கூறினார்.
இதுவரை பதிவான 36 திருட்டு புகார்களில் 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டுள்ளனர்.
வருகிற 15-ம் தேதி முதல் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னாடி அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். உயிரிழப்புகளைத் தடுக்கவே இந்த நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதற்க்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.













