திருவாரூரில் இளம் பெண்ணின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதல் திருமணம் செய்த பெற்றோர் – வேறொருவரை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் மண்ணெண்ணெய் ஊற்றி இளம் பெண் தற்கொலை – காப்பாற்ற முயன்ற தந்தையும் தீக்காயத்துடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி . திருவாரூர் நகர போலீசார் விசாரணை.
திருவாரூர் வடக்கு வீதியை சேர்ந்தவர் குமார் (60) இவர் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். காதலித்து திருமணம் செய்து கொண்ட குமாருக்கு மீரா என்ற மனைவியும், ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகள் ஸ்ரீலேகா (26) சைக்காலஜி பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
கல்லூரியில் படிக்கும் போது ஸ்ரீலேகா ஒருவரை மூன்றாண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இவரது காதலுக்கு ஸ்ரீலேகாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்ரீலேகாவின் எதிர்ப்பை மீறி அவரது பெற்றோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறையைச் சேர்ந்த ஒருவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர். மாப்பிள்ளை வெளிநாட்டில் அரசு வேலை பார்ப்பதாக கூறி நிச்சயதார்த்தம் செய்த நிலையில் மாப்பிள்ளை வெளிநாட்டில் சாதாரண வேலை பார்ப்பது தெரிய வந்ததால் திருமணம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது .
மீண்டும் வேறொரு பையனை பார்த்து திருமணம் செய்து வைக்க ஸ்ரீலேகாவின் பெற்றோர் தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளனர். ஆனால் ஸ்ரீலேகாவோ தான் காதலித்த பையனை திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி பெற்றோருடன் தினந்தோறும் சண்டை போட்டுள்ளார்.
இருந்த போதும் காதல் திருமணம் செய்த பெற்றோர் தனது மகளுக்கு காதல் திருமணம் செய்து வைக்க மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது .
இந்த நிலையில் இன்று காலை திடீரென வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தீ வைத்து ஸ்ரீலேகா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது தந்தை குமார் அவரைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஸ்ரீலேகா உயிரிழந்த நிலையில் காப்பாற்ற முயன்ற தந்தை குமாரும் பலத்த தீக்காயத்துடன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவாரூர் நகர போலீசார் உடனடியாக ஸ்ரீலேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளம்பெண்ணின் காதலுக்கு பெற்றோர் தொடர் எதிர்ப்பு தெரிவித்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி இளம்பெண் தீக்குளித்த சம்பவத்தால் திருவாரூர் வடக்கு வீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பாக திருவாரூர் நகர காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.













