“இளைஞர்கள் மேடையிலிருந்து வீசப்படுகிறார்கள்” – வசந்தபாலன் வருத்தம்

மதுரை:
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் குரல் போதுமான அளவில் பேசப்படவில்லை என்றும், சமீபத்தில் நடந்த தவெக தலைவர் விஜய்யின் மாநாட்டில் இளைஞர்களுக்கு ஏற்பட்ட அவதியைக் குறித்து இயக்குநர் வசந்தபாலன் கவலை தெரிவித்துள்ளார்.

மதுரை பாரப்பத்தியில் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற்ற தவெக மாநில மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற இம்மாநாட்டில் பெரும்பாலும் இளைஞர்களே திரண்டிருந்தனர். வெப்பநிலை 100 டிகிரியை கடந்த நிலையில், தொண்டர்கள் ஒருநாள் முன்பே திடலிலேயே தங்கி விஜய்யை பார்க்க காத்திருந்தனர். மாநாட்டு நாளில் விஜய் ரேம்ப் வாக் வந்தபோது கூட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பில், அவரை அருகில் பார்க்க முனைந்த ஒருவரை பவுன்சர் தூக்கி வீசிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்தச் சம்பவத்தை ஒட்டி, பூக்கி பட விழாவில் கலந்து கொண்ட வசந்தபாலன், “ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டை பார்த்தேன். காலை முதலே வெயிலில் கருகி அவதியுறும் இளைஞர்களை கண்டேன். மேடையிலிருந்து அவர்கள் தூக்கி வீசப்படுவதைப் பார்த்ததும் மனம் வலித்தது. அவர்களை அரசியல்படுத்தவும், கவரவும் நாமே தவறிவிட்டோமோ என்ற எண்ணம் வந்தது. அவர்களின் குரல் சினிமாவில் பதிவு செய்யப்படாததால், வேறு திசை நோக்கி செல்கிறார்கள்,” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version