ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தைச் சேர்ந்த சைனா தேவி (23) என்பவர், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். காசநோய் மற்றும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மேலதிக சிகிச்சைக்காக ஜெய்ப்பூரிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட ரத்தப்பரிசோதனையில், அவரது ரத்தவகை ‘ஏ பாசிட்டிவ்’ என தவறாக குறிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில் மருத்துவர்கள், ரத்த வங்கியில் இருந்து ‘ஏ பாசிட்டிவ்’ வகை ரத்தத்தை பெற்று அவருக்கு மாற்றினார்.
இந்த ரத்தம் மாற்றப்பட்டதையடுத்து, சைனா தேவிக்கு திடீரென கடுமையான காய்ச்சல், குளிர் மற்றும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. உடனே தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர் மீண்டும் பரிசோதனை செய்யபட்டார். அதில் அவரது உண்மையான ரத்தவகை ‘பி பாசிட்டிவ்’ என்பது கண்டறியப்பட்டது.
ரத்தவகை தவறாக ஏற்றப்பட்டதால் ஏற்பட்ட உடல்நிலை மோசமடைதலை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனையடுத்து வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் கருவில் இருந்த குழந்தை உயிரிழந்தது. மருந்துகள் மூலம் அந்தக் கருவை அகற்ற முயற்சி செய்யப்பட்ட போதும், சைனா தேவியின் ஹீமோகுளோபின் அளவு தொடர்ந்து குறைந்ததுடன், உடல்நிலையும் மேலும் சீர்கெட்டது. இறுதியில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சைனா தேவியின் குடும்பத்தினர் மருத்துவமனையின் அலட்சியத்தையே காரணமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.