திருப்பத்தூர் பெரிய ஏரியில் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி விட்டு தடுப்பு வேலி அமைக்கும் பணியை தொடர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஏரிக்கோடி வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்கவாட்டில் தடுப்பு வேலி அமைக்கும் பணி பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
நீண்ட நாட்களாகவே திருப்பத்தூர் பெரிய ஏரியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளை கட்டுப்படுத்த நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் இந்த தடுப்பு வேலி அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தாமல் தடுப்பு வேலி அமைக்கும் பணி நடைபெறுவதால் மேலும் நீர்நிலை மாசு அடையும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை தடுப்பு வேலி அமைக்கும் பணி முடிவடைந்து அதற்குப் பிறகு குப்பை கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ள முற்பட்டால் நிர்வாகத்திற்கு இரண்டு மடங்கு செலவு அதிகரிக்கும் என்பதால் தடுப்பு வேலி பணியை நிறுத்திவிட்டு முதலில் குப்பை கழிவுகளை அகற்றி அதற்குப் பிறகு தடுப்பு வேலி பணியை தொடர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.















