டெல்லி: கடந்த மே 10ஆம் தேதி முடிந்த இந்தியா-பாகிஸ்தான் மோதலில் சீனா முக்கியமான பங்கு வகித்ததாகவும், அதனால் தற்போது அதிர்ச்சி நிலைசேர்ந்துள்ளதாகவும் புதிய ராணுவ ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கூட்டுப் போர் ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் அசோக் குமார் கூறியதாவது, “இந்திய ஆயுதங்கள் மற்றும் விமானங்கள் எங்கு உள்ளன என்பதை கண்டறிய சீனா தனது ரேடார், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள் தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. இது இந்தியா நினைத்ததைவிட சீனாவின் நேரடி தலையீடு அதிகமாக இருந்ததை உணர்த்துகிறது” என்றார்.
சீனாவின் PL-15E ஏவுகணை பாகிஸ்தான் மூலம் பயன்படுத்தப்பட்டது
இந்த மோதலின் போது பாகிஸ்தான், சீனாவின் உயர் தொழில்நுட்ப ஏவுகணையான PL-15E-ஐ பயன்படுத்தியதாகவும், இந்திய எல்லை பகுதிகளில் பல இடங்களில் இவை செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்தியாவின் ஏவுகணை தடை அமைப்பான எஸ்-400 வழியாக பல PL-15E ஏவுகணைகள் தடுக்கப்பட்டன.
இந்த ஏவுகணையின் பாகங்கள் இந்தியாவில் விழுந்ததால், அதைப் பயன்படுத்தி இந்தியா ரிவர்ஸ் எஞ்சினியரிங் செய்து அதன் உள்தொழில்நுட்பங்களை புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் சீனாவின் ரகசியமான ஏவுகணை தொழில்நுட்பங்கள் இந்தியா கைக்கு சென்றுவிடும் என்ற அச்சத்தில் சீனா கடுமையான அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவின் நேரடி தலையீடு?
இதைவிட ஆச்சரியமான தகவல் என்னவென்றால், PL-15 வகை ஏவுகணைகளை சீனர்கள் நேரடியாக பாகிஸ்தானில் இருந்து இயக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணர்கள் பாகிஸ்தானில் இருந்து இந்த ஏவுகணைகளை இயக்கியதாகவும், இதற்காக சீனாவின் செயற்கைக்கோள் படங்கள், உளவு தகவல்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என இந்திய ராணுவம் சந்தேகிக்கிறது.
பெரும் உளவு ஆதரவு?
பாகிஸ்தானுக்கு சீனா தானாகவே ராணுவ உபகரணங்களை அனுப்பியதுடன், அதைப் பயன்படுத்த வழிகாட்டும் உளவு மற்றும் செயற்கைக்கோள் ஆதரவையும் வழங்கியிருக்கலாம் என தெரிகிறது. இதன் மூலம் சீனா, இந்தியா-பாகிஸ்தான் போரில் செயல்படாத நேரடி பங்கேற்பாளராக செயல்பட்டது என்பது குறித்து இந்திய ராணுவம் கவலையுடன் உள்ளது.
சீனா – பயிற்சிக்காக போர்?
இதே சமயம், இந்த மோதலை சீனா ஒரு “பயிற்சி வாய்ப்பாக” பயன்படுத்தியிருக்கலாம் எனவும், இந்தியாவின் எதிர்வினைகளை பரிசோதிக்க உள்நோக்கத்துடன் ஈடுபட்டிருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சீனாவின் நவீன ஏவுகணை தொழில்நுட்பம் இந்தியா கைக்கு சென்றிருக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்பது, இந்த மோதலின் பெரும் பக்க விளைவாகவும், எதிர்கால தற்காப்பு ஆய்வுகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.