மதுரை :
“கன்னட மொழி எப்போது தோன்றியது ? கன்னட இனம் எந்த காலகட்டத்தில் உருவானது ?” என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது, தக்கலைப் படம் குறித்து எழுந்த சர்ச்சை மற்றும் பல அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நேரத்தில், அவர் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.
“தக் லைப்” படத்துக்கு தடையா ?
கர்நாடகாவில் ‘தக் லைப்’ படம் வெளியாகக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,
சீமான் கூறியதாவது :
“கர்நாடகாவில்தானே படம் வெளியாக மாட்டேன் என சொல்றாங்க. உலகம் முழுக்க 13 கோடி தமிழர்கள் பரவி இருக்காங்க. கன்னட மொழியைப் பற்றிப் பேசியதாகக் கூறி கமல்ஹாசனின் படத்துக்கு தடையா? விஜய் என்ன பண்ணாரு? அவருடைய படத்துக்கும் தடையா? உங்களுக்கு தமிழர் என்றாலே ஒரு வெறுப்பு.”
“தமிழ் என்றாலே வெறுப்பு” – சீமானின் குற்றச்சாட்டு
மேலும் அவர் கூறுகையில்,
“கர்நாடகாவில் இருந்து வந்த ஈ.வெ.ராவுக்கு தமிழ் மீது வெறுப்பு. ‘தமிழை ஒழிங்க’ என்றவரை நாங்க தமிழர் தலைவரா ஏற்கணும் ? அவர்கள் தமிழ் என்றாலே கசப்பு, அருவருப்பு கொண்டவர்கள் போலிருக்கின்றனர். தமிழ் மொழியில் இருந்து பிறந்த கன்னடத்தை அங்கீகரிக்கவே வெறுக்கின்றனர்.”
“நாங்க தமிழர்கள், எங்களுடைய வரலாறும், மொழியின் தோற்றமும் தெளிவாக உள்ளது. அதுபோலவே, கன்னடம் எப்போது தோன்றியது ? கன்னட இனம் எந்த காலத்தில் உருவாயிற்று என்பதையும் வரலாற்று ஆதாரத்தோடு சொல்லட்டும்,” என்றார்.
ஈ.வெ.ரா.வுக்கு ஜாதி சாயமா ?
த.வெ.க தலைவர் விஜய், ஈ.வெ.ராவுக்கு ஜாதிச் சாயம் இருப்பதாக கூறியதைக் குறித்து சீமான் பதிலளிக்கையில்,
“அவர் நாயக்கர் என்பதே உண்மை. அவர் எழுதிய கடிதங்களிலும் அந்த பெயரே உண்டு. ஆந்திராவில் அவரது படம் ‘நாயக்கர்’ என்றே வெளியானது. விஜய் தம்பி ஏதோ சொல்றார்,” என்றார்.
வைகோவுக்கு எம்.பி. பதவி ஏன் கிடைக்கவில்லை ?
தி.மு.க கூட்டணியில் வைகோவுக்கு எம்.பி பதவி வழங்கப்படாததைக் கேட்டதற்கு,
“கமல்ஹாசன் எம்.பி வேண்டுமென பேசி முடிவு செய்தார்கள். அதுபோல வைகோவும் பேசி இருக்க வேண்டியது. ஆனால், அவர் தனி கட்சி தலைவர் என்பதால் தி.மு.க-வில் நேரடியாக கேட்க முடியாது,” எனச் சீமான் விளக்கினார்.
பா.ம.க. உட்கட்சி மோதல்… காயங்கள் ஆறும் !
பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள உள்கட்சிச் சிக்கல்களைப் பற்றி,
“ஐயா காயம் பட்டிருப்பது வேதனையாக உள்ளது. இந்தக் காயங்கள் ஆறும். சின்ன சின்ன மனவருத்தங்கள் வந்துள்ளன. அருகருகே அமர்ந்து பேசும் சூழல் இல்லாததால் பொதுவெளியில் பேச்சு வந்தது,” என்றார்.
சாலைகள் சீரமைப்பு – முதல்வருக்கு வாழ்த்து !
நாளை முதல்வர் வருகையால் சாலைகள் சீரமைக்கப்பட்டிருப்பதைப் பற்றிய கேள்விக்கு,
“அடிக்கடி முதல்வர் ஒவ்வொரு ஊருக்கும் வரவேண்டும். அப்போதுதான் எல்லா ஊர்களிலும் சாலைகள் பளீச் பளீச் என்று வரும்,” எனக் கூறினார்.