சமீபகாலமாக தமிழ் திரையுலகில் Copyright பிரச்னை விஸ்வரூபமெடுத்து வருகிறது.குறிப்பாக, தன்னுடைய அனுமதி இன்றி, தாம் இசைத்த பாடல்கள் பல படங்களில் பயன்படுத்துவதாகக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. எனினும், இதுதொடர்பாக காரசார பேச்சுகளும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன் இதுகுறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். கங்கை அமரன் இசையமைத்த ’விட்ஃபா கீதம்’ பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவின்போது அவரிடம் காப்புரிமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “7 கோடி ரூபாய் கொடுத்த இசையமைப்பாளர்கள் போடும் பாடல் காதில் விழுவதே இல்லை; அந்தப் பாடல்கள் ஹிட் ஆவதில்லை. எங்கள் பாடல்தானே அதில் வரவேற்பைப் பெறுகின்றன. அப்படி என்றால், அதற்கான கூலி எங்களுக்கு வரவேண்டும்தானே?
உங்கள் இசையமைப்பாளரிடம் பணம் கொடுத்தும் வாங்க முடியாத இசையை, எங்களிடம் இருந்து எடுத்து அதுவும் எங்களின் பெயர்கூடப் போடாமல் பயன்படுத்தி, நீங்கள் வரவேற்பைப் பெறுகின்றீர்கள்; அந்த இசையில் எங்களுக்கும் பங்கு உண்டுதானே? அனுமதி கேட்டால், அண்ணன் (இளையராஜா) உடனே கொடுத்துவிடுவார்; ஆனால், சொல்லாமல் எடுக்கும்போதுதான் அவருக்கு கோபம் வருகிறது.
எங்களுக்குப் பணத்தாசை இல்லை; எங்களிடமே செலவு செய்ய முடியாமல் கொட்டிக்கிடக்கிறது. அனுமதி கேட்பதுதான் இங்கே அடிப்படை. அஜித் படம் என்றல்ல, எங்கள் இசை என்பதால்தான் கேட்கிறோம். உங்கள் இசையமைப்பாளரால் முடியவில்லை; எங்கள் பாடல்தான் உங்களை ஜெயிக்கவைக்கிறது என்ற சந்தோஷம்தான் எல்லாம். முடிந்தால் உங்கள் இசையமைப்பாளரை வைத்து அப்படி ஒரு பாடலைப் போடச்சொல்லுங்கள் என்றே ஊக்குவிக்கிறோம். நாங்கள் ஏன் அதற்கு உதவி செய்யவேண்டும்? நீங்கள் உழைத்து முன்னுக்கு வாருங்கள்” எனக் கடுமையாக விமர்சித்தார்.