கோத்தென்பர்க் (சுவீடன்): உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான வால்வோ, தற்போது கடுமையான வர்த்தக சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையை சமாளிக்க, செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக 3,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக வால்வோ நிறுவனத் தலைவர் ஹகன் சாமுவேல்சன் அறிவித்துள்ளார்.
சுவீடனைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் வால்வோ நிறுவனம், SUV வகை சொகுசு கார்களை பெல்ஜியம், தெற்கு கரோலினா மற்றும் சீனாவில் உற்பத்தி செய்து வருகிறது. உலகளவில் வால்வோவுக்கு பெரும் வரவேற்பு இருப்பதோடு, இந்தியாவிலும் இதன் சொகுசு கார்களுக்கு வாகன ஆர்வலர்களிடையே தனி மவுசு உள்ளது.
இந்நிலையில், சீனாவில் விற்பனை கடுமையாக சரிந்திருப்பதும், அமெரிக்காவில் வலுவான தள்ளுபடி அறிவிக்கப்பட்டதுமே வால்வோவின் வருவாயில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, நிறுவன செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக பணிநீக்கம் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த அறிவிப்பு, வால்வோவின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் மற்றும் உலக வாகன சந்தையின் நிலவரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.