விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படத்தில் தந்தையாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. 1994-ஆம் ஆண்டு வெளியான இந்தி படம் ‘துரோகால்’ மூலம் தேசிய விருது பெற்ற அவர், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி என பல மொழிகளில் இந்தியா நடிகராக திகழ்ந்து வருகிறார்.
அவரது தமிழ்ப் படங்களில் தில், பாபா, ஏழுமலை, பகவதி, தமிழன், கில்லி, ஆறு, மலைக்கோட்டை, குருவி, மாப்பிள்ளை, அநேகன் உள்ளிட்ட பல படங்கள் இடம் பெற்றுள்ளன. சமீபத்தில் 2023-ல் வெளியான இறைவன் தான் அவர் நடித்த கடைசி தமிழ்ப் படம்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், தேசிய விருது பெற்ற காலத்தில் ஏற்பட்ட ஒரு சுவாரஸ்ய அனுபவத்தை ஆஷிஷ் வித்யார்த்தி பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:
“துரோகால் படத்துக்காக தேசிய விருது பெற்றபோது இயக்குனர் கோவிந்த் நிகாலனி, ஒரு பெரிய ஹோட்டலில் திரையுலக பிரபலங்களுக்கான விருந்து ஏற்பாடு செய்யச் சொன்னார். அந்த ஹோட்டலுக்குள் நான் ஒருபோதும் சென்றதில்லை. அங்கே சாப்பிட்டதும் இல்லை. விலையுயர்ந்த பானங்களை ஆர்டர் செய்தால் செலவு அதிகமாகிவிடுமோ என பயந்து, கையில் லெமன் ஜூஸை மட்டும் வைத்துக்கொண்டிருந்தேன்.
அந்த நாளில் கூட, வழக்கமாக மதுவைத் தொட்டதே இல்லாதவர்கள் கூட குடித்தனர்; சைவம் சாப்பிடுபவர்கள் அசைவம் சாப்பிட்டனர். இதையெல்லாம் கண்டு நான் பதற்றமடைந்தேன். உடனே இயக்குநரிடம், ‘பணம் கட்ட முடியாவிட்டால் என்ன செய்ய வேண்டும்? பாத்திரங்களை கழுவ வேண்டுமா? அல்லது போலீஸ் அழைக்கப்படுவார்களா?’ என்று கேட்டேன். எனது நிலையை உணர்ந்த அவர், விருந்துக்கான முழு செலவையும் தானே ஏற்றுக்கொண்டார். அதன் பிறகுதான் எனக்குள் இருந்த பயம் குறைந்தது,*” என்று தெரிவித்தார்.
















