தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொள்ளும் அரசியல் பிரச்சாரங்களுக்கு காவல்துறை கடுமையான நிபந்தனைகள் விதிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விஜய் கடந்த மாதம் தொடங்கி மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் இந்த சுற்றுப்பயணத்தில், சமீபத்தில் திருச்சி மற்றும் அரியலூரில் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், பெரம்பலூரில் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடத்த முடியாமல் போனது. அடுத்த கட்டமாக, நகை மற்றும் மயிலாடுதுறையில் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இந்நிலையில், “தவெக தலைவர் விஜயின் பொதுக்கூட்டங்கள் மற்றும் மாநாடுகளுக்கு மட்டுமே காவல்துறை கடுமையான நிபந்தனைகளை விதிக்கிறது. பிற அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் அனுமதிகளில் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இல்லை” என்று தவெக துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “திருச்சி பிரச்சாரத்திற்கு கடைசி நேரத்தில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால், விக்கிரவாண்டி, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடந்த மாநாடுகள் அமைதியாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இன்றியும் நடைபெற்றன. டிசம்பர் 20 வரை ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டுள்ளோம். எனவே, மற்ற கட்சிகளுக்குச் செய்கின்றதைப் போலவே எங்கள் கட்சிக்கும் அனுமதி வழங்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதியிடம் கோரியபோதும், அவசர விசாரணை மறுக்கப்பட்டது. எனினும், இன்று வழக்கை விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.