மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் மணி கிராமம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல்வேறு தெருகளுக்குச் செல்லும் மின்சார இணைப்பு போஸ்ட் மரம் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மின்வாரியத் துறையினரால் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட இந்த மின் இணைப்பு மின் கம்பங்கள் அதன் ஆயுள் காலம் முடிவடைந்து இன்னும் புதிய மின் கம்பங்களை மின்வாரியத்தால் மாற்றப்படாமல் உள்ளது. இதனால் மின் கம்பங்கள் பழுதடைந்து போஸ்ட் மரத்தில் உள்ள கம்பிகள் துருப்பிடித்த நிலையில் வெளியே தெரியும் அளவிற்கு முறிந்து விழும் தருவாயில் உள்ளது. இது தொடர்பாக அப்பகுதி தெருவாசிகள் பூம்புகாரில் உள்ள மின்வாரியத்துறைநகருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரை சீர் செய்ய முன்வரவில்லை என அப்பகுதியில் உள்ள சுபாஷ் என்கின்ற இளைஞர் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் காணொளி காட்சி வாயிலாக பேசி வெளியிட்டுள்ளார். அதில் அந்த இளைஞர் கூறியதாவது.
மணி கிராமம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ரொம்ப காலமாக இந்த மின் கம்பங்கள் போடப்பட்ட நிலையில் தற்போது இந்த மின் கம்பங்கள் பாழடைந்து பழுது ஏற்பட்டு முறிந்து விழும் தருவாயில் உள்ளது. மேலும் இரண்டு போஸ்ட் மரத்துக்கு இடையே மின் கம்பிகள் தாழ்வான நிலையில் தொங்குகிறது. இதனால் திடீரென்று புயல் அடித்தாலோ மழை பெய்தாலும் மின்கம்பங்கள் முறிந்தும் கம்பிகள் அருந்து விழுந்தால் உயிர் சேதம் கண்டிப்பாக ஏற்படும். மேலும் இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் மின்வாரிய அலுவலகம் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எந்த அதிகாரிகளும் எங்கள் பகுதிக்கு வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவில்லை எனவும் தெரிவித்தார். இது தொடர்பாக அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்காததால் சமூக இணையதளத்தில் காணொளி காட்சி வாயிலாக இந்த புகாரை தெரிவிக்கிறேன் என்று தெரிவித்தார். உடனடியாக மின்வாரியத்துறையினர் எங்கள் பகுதிக்கு ஆய்வு செய்து புதிய மின் கம்பங்களை அமைத்துத் தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

















