திருவாரூரில் புதிய ரேஷன் கார்டு பெறுவதற்காக விவசாயக் கூலித் தொழிலாளிடம் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரி வீடியோ வெளியாகி பரபரப்பு – எவ்வளவு அதிகம் காசு கொடுக்கிறீர்களோ அவ்வளவு விரைவாக ரேஷன் கார்டு கிடைக்கும் என கூறி லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்.
ஏற்கனவே உள்ள அதிகாரியிடம் லஞ்சம் கொடுத்த போதும், நான் புதிதாக வந்துள்ளேன் எனக்கும் லஞ்சம் கொடுங்கள் என கறார் காட்டி லஞ்சம் வாங்கும் அதிகாரிகள். இதுதான் விஜய் அரசு செய்த மாற்றமா..?
அரசு அலுவலகங்களில் லஞ்சம் துளி கூட இல்லை என முதல்வர் விஜய் கூறும் நிலையில், அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளதால், அரசு நிர்வாகம் முதல்வருக்கு தெரிந்து தான் நடக்கிறதா..? இல்லை அரசு நிர்வாகம் குறித்து எதுவும் தெரியாமலே விஜய் முதல்வராக இருக்கிறாரா என திருவாரூர் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட கோரையாறு ராமநாதன் கோவில் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி. வயது 63. விவசாயக் கூலி தொழிலாளியான இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவரது மனைவி இறந்து விட்டார். இந்த நிலையில் அய்யாசாமியின் 31 வயது மூத்த மகன் விக்னேஸ்வரனுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில், தனி ரேஷன் கார்டு விண்ணப்பிப்பதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அய்யாசாமி கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்தில் விண்ணப்பித்தார் .
இந்த நிலையில் கூத்தாநல்லூர் தாலுக்கா அலுவலகத்தில் விண்ணப்பித்தும் முன் மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை ரேஷன் கார்டு கிடைக்காததால் அய்யாசாமி கூத்தாநல்லூர் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடம் இது குறித்து கேட்டுள்ளார்.
இதற்கு அங்கு பணியில் இருந்த வருவாய் ஆய்வாளர் ஒருவர் 1500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இந்த 1500 ரூபாய் லஞ்சத்தையும் அய்யாசாமி கொடுத்தும், இதுவரை ஐயா சாமிக்கு புதிய ரேஷன் கார்டு வரவில்லை என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இன்று ஐயா சாமி மீண்டும் கூத்தாநல்லூர் தாலுகா அலுவலகத்தில் நேரில் சென்று கேட்டபோது….
ஏற்கனவே இருந்த வருவாய் ஆய்வாளர் பணி மாற்றம் செய்யப்பட்டு தற்போது அந்த இடத்தில் அபிநயா என்ற புது வருவாய் ஆய்வாளர் பணியில் அமர்ந்துள்ளார். அவரிடம் புது ரேஷன் கார்டு குறித்து கேட்டபோது.. அவரும் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார்.
நான் ஏற்கனவே இங்கிருந்து அதிகாரியிடம் பணம் கொடுத்துள்ளேன் என அய்யாசாமி கூறிய போதும், அது அவரிடம் கொடுத்து விட்டீர்கள். அது பற்றி எனக்கு தெரியாது எனக்கு கொடுங்கள் என கேட்டுள்ளார். என்னிடம் 1500 ரூபாய் இல்லை, ஆயிரம் ரூபாய் தான் இருக்கிறது எனக் கூறி அய்யாசாமி அபிநயாவிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். இன்னும் மூன்று மாதத்தில் உங்களுக்கு ரேஷன் கார்டு வந்துவிடும் என அபிநயா அய்யாசாமிடம் கூறியுள்ளார்.
அய்யாசாமி அபிநயாவிடம் பணம் கொடுப்பதை வீடியோ எடுத்து வைத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இது குறித்து ஐயாசாமி மேலும் கூறும்போது …
எனது மூத்த மகனுக்கு திருமணம் ஆகி தனி வீட்டில் வசிப்பதால் அவருக்கு புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பிப்பதற்காக கடந்த மூன்று மாதமாக கூத்தாநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு அலைந்து வருகிறேன். ஏற்கனவே அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் 1500 ரூபாய் கொடுத்துள்ளேன். தற்போது அந்த இடத்தில் அபிநயா என்ற ஒரு அதிகாரி உள்ளார். அவரிடம் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளேன். நன்கொடையாக அவர் ஆயிரம் ரூபாய் கேட்டார். நானும் கொடுத்துள்ளேன்.
பணம் கொடுத்தால் உடனடியாக ரேஷன் கார்டு கிடைக்கும் என கூறினார். அதனால் நான் பணம் கொடுத்தேன் கார்டு வருவதற்கு ஒன்றரை மாசம் ஆகும் என கூறினார்.
பணம் எவ்வளவு கூடுதலாக கொடுக்கிறீர்களோ அவ்வளவு விரைவாக ரேஷன் கார்டு கிடைக்கும் என கூறினார். 5000 ரூபாய் கொடுத்தால் பத்து நாட்களுக்குள் ரேஷன் கார்டு கிடைக்கும் என்றனர். நான் ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளதால் ஒன்றரை மாதத்தில் எனக்கு ரேஷன் கார்டு கிடைக்கும் என கூறினார்
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பேசும்போது…
ஊழல் லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகத்தினை முழு முனைப்போடு நடத்தி வருகிறோம். ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், ஒரு பைசா கூட லஞ்சம் வாங்குவதில்லை, ஒரு பைசா ஊழல் இல்லை, எல்லா வேலைகளையும் சும்மா டக்கு டக்குனு நடக்குது என்ன பேசி இருக்கிறார்.
ஆனால் திருவாரூரில் அரசு அதிகாரி ஒருவர் ஏழை எளிய விவசாயி கூலி தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் எவ்வளவு அதிகம் லஞ்சம் கொடுக்கிறோமோ. அவ்வளவு விரைவாக வேலை நடக்கும் என அரசு அதிகாரிகள் ஏழை எளிய மக்களிடம் கூறி லஞ்சம் வாங்குகிறார்கள் என விவசாயக் கூலி தொழிலாளி கூறுவதை கேட்கும் போது நெஞ்சம் பதறுகிறது.
இதுதான் முதல்வர் விஜய் கூறிய மாற்றமா…? இதுதான் லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சியா..?
இதற்காகத்தான் மக்கள் விஜயை முதலமைச்சர் ஆக்கினார்களா..? என பொதுமக்கள் கேள்விக்கணங்களை எழுப்புகின்றனர்..
அரசு அலுவலகங்களில் லஞ்சம் துளி கூட இல்லை என முதல்வர் விஜய் கூறும் நிலையில், அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளதால், அரசு நிர்வாகம் முதல்வருக்கு தெரிந்து தான் நடக்கிறதா..? இல்லை அரசு நிர்வாகம் குறித்து எதுவும் தெரியாமலே விஜய் முதல்வராக இருக்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது..?















