இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட், 2026ஆம் நிதியாண்டிற்கான ஜூன் காலாண்டு முடிவுகளை (Q1 Results) இன்று மாலை சந்தை முடிவுக்கு பிறகு வெளியிட்டது.
அதில், நிறுவனம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 49% அதிகரித்து ரூ.2,226 கோடி நிகர லாபம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிமெண்ட் விலை உயர்வு, விற்பனை வளர்ச்சி மற்றும் வணிக செயற்பாடுகளில் முன்னேற்றம் ஆகியவற்றின் நேரடி விளைவாகும்.
வருவாய் மற்றும் லாபத்தில் வலிமையான வளர்ச்சி :
ஜூன் காலாண்டில், ஒருங்கிணைந்த வருவாய் 17.7% வளர்ச்சி பெற்று ரூ.21,275.45 கோடியாக இருந்தது.
ஒருங்கிணைந்த EBITDA (முன் வரி, வட்டி, கழிவுகளுக்குப் பின் வருமானம்) 44% உயர்ந்து ரூ.4,591 கோடி ஆகியுள்ளது.
செயல்பாட்டு EBITDA ரூ.1,248 கோடியாக, கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட ரூ.337 கோடி அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
விற்பனை அளவிலும் 9.7% வளர்ச்சி காணப்பட்டு, மொத்தமாக 36.83 மில்லியன் டன் (MT) சிமெண்ட் விற்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் லாபம் அதிகரிக்க முக்கிய பங்காற்றியுள்ளது.
விலை உயர்வும் தேவையும் வளர்ச்சிக்கு துணை :
கடந்த சில காலமாக விலை நிர்ணயத்தில் மந்தநிலை காணப்பட்ட நிலையில், தற்போதைய காலாண்டில் தெற்கு மற்றும் கிழக்கு இந்திய சந்தைகளில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இது நிறுவன வளர்ச்சிக்கு ஆதரவளித்துள்ளது.
மேலும், உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் தேவை அதிகரிப்பதும், குறுகிய காலத்தில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி வேகமடைந்ததும், வருவாயில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா சிமென்ட்ஸுடன் ஒத்துழைப்பு – புதிய தொடக்கம் :
சென்னையை தளமாகக் கொண்ட இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம், கடந்த ஆண்டில் அல்ட்ராடெக்குடன் கையகப்படுத்தப்பட்டு, தற்போது அதன் பங்குகளும் நிதி நிலையும் மேம்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சிமென்ட்ஸ், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.9 கோடி இழப்பை சந்தித்திருந்த நிலையில், இக்காலாண்டில் ரூ.92 கோடி EBITDA லாபம் பதிவு செய்துள்ளது.
இந்த நிறுவனம் ஆண்டுக்கு 14.45 மில்லியன் டன் (MTPA) உற்பத்தி திறனை கொண்டிருப்பதுடன், பெரும்பாலும் தென்னிந்தியாவிலேயே செயல்படுகிறது. வட இந்திய உற்பத்தி மையங்களில் செயற்பாட்டு திறன் 300,000 டன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பங்கு நிலை மாற்றம் – கண்காணிப்பு அவசியம் :
இன்றைய நாளில் (ஜூலை 21), அல்ட்ராடெக் சிமென்ட் பங்கு விலை 0.50% குறைந்து ரூ.12,561 ஆக குறைந்துள்ளது.
ஆனால், ஆழமான நிதி முடிவுகளையடுத்து ஜூலை 22 அன்று பங்கு விலையில் உயர்வு வரலாம் என்பதால், பங்குகளை வாட்ச் லிஸ்டில் சேர்க்கும் விஷயத்தில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.