மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து நடத்துநர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யகோரி உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் தற்காலிக நடத்துநர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் வடக்கு தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன்.45. அரசு பேருந்து நடத்துநரான இவர் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக பொறுப்பில் இருந்தவர். கடந்த 28 ஆம் தேதி இரவு பணி முடிந்து சீருடையில் வீடு திரும்பிய தமிழ்செல்வனை மர்ம நபர்கள் ஆனந்ததாண்டவபுரம் அருகே வழிமறித்து கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர். மாவட்ட எஸ்பி சினேகா பிரியா நேரில் விசாரணை நடத்திய நிலையில் தமிழரசனின் உடலை கைப்பற்றிய மயிலாடுதுறை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழரசனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் 29ஆம்தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தைக்குப் பின் மறியலை கைவிட்டு குற்றவாளிகளை கைது செய்தால் தான் உடலை வாங்கிச் செல்வோம் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை செய்த உடல் சவகிடங்கில் வைக்கப்பட்டது. தமிழரசன் முன்விரோதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்டாரா இல்லை வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டும், தமிழரசனின் செல்போன் எண்ணுக்கு பேசியவர்கள் சந்தேகப்படும் நபர்கள் என 20க்கும் மேற்பட்டோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து பல்வேறு நபர்களிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மயிலாடுதுறை அருகே அப்பங்குளம் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து தற்காலிக நடத்துநர் ராஜேஷ் கண்ணன்(21), மாதேஷ்வரன்(23) ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்ததை கண்டறிந்தனர். 1ஆம்தேதி இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து தமிழ்செல்வனின் உடலை உறவினர்கள் அன்று மாலை பெற்று சென்றனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தற்காலிக நடத்துனரான ராஜேஷ்கண்ணன் பணியாற்றி வந்த பேருந்தில் தமிழ்ச்செல்வன் நடத்துனராக நியமிக்கப்பட்டதால் வேறு இடத்திற்கே பணி மாறுதலாகி செல்ல விரும்பாத ராஜேஷ் கண்ணன் தமிழ்ச்செல்வனை நேரில் சந்தித்து பணியை தனக்கு விட்டுக் கொடுக்கும்படி கேட்டுள்ளார். அப்போது எழுந்த வாக்குவாதத்தில் தமிழ்ச்செல்வன் ராஜேஷ் கண்ணாவின் குடும்பத்தினரை தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் கண்ணன் தமிழ்செல்வனை கொலைசெய்ய திட்டமிட்டு அப்பங்குளத்தைச் சேர்ந்த மாதேஸ்வரனுடன் சென்று பணிமுடிந்து சீருடையில் வீடு திரும்பிய தமிழ்செல்வனை வழிமறித்து கொடூரமாக அறிவாளால் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட ராஜேஷ் கண்ணன்,, மாதேஸ்வரன் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.














