சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், நடிகரும், கட்சித் தலைவருமான விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 2,000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருந்தன. அழைப்பிதழ் அல்லது அடையாள அட்டை கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனக் கட்சித் தலைமையகம் முன்கூட்டியே அறிவித்திருந்தது.
காலை 10 மணியளவில் தொடங்கிய கூட்டத்தில், முதலில் கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர், முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம் 1:
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 2:
கோவையில் கல்லூரி மாணவி ஒருவருக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து வன்மையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு விரைவான சட்ட நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. மேலும், தற்போதைய திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு குறைந்துவிட்டது என்றும், மாநிலம் தலைகுனிந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.
தீர்மானம் 3:
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதையும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும் தவெக கடுமையாக கண்டித்தது. அவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டுத் தரவும், இந்திய ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 4:
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்தம், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை பாதிக்கும் செயலாக உள்ளது என்றும், இப்பணிகளை நிறுத்தி, முன்னர் பின்பற்றப்பட்ட நடைமுறையைத் தொடர வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை தவெக வலியுறுத்தியது.
மொத்தத்தில், கரூர் விபத்து முதல் மீனவர் பிரச்சனை வரை பல்வேறு சமூக, அரசியல் பிரச்சனைகளைக் குறித்து வலுவான தீர்மானங்களை நிறைவேற்றிய சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், தவெக அரசியல் நடவடிக்கைகளுக்கு புதிய திசை அமைத்துள்ளது.

















