வாஷிங்டன் : உலகளாவிய அளவில் பெரிய எதிரொலிகளை ஏற்படுத்திய வர்த்தக போர் முடிவுக்கு வர உள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளும், பரஸ்பரமாக விதித்திருந்த இறக்குமதி வரிகளை 90 நாட்களுக்கு திரும்ப பெற ஒப்புக்கொண்டுள்ளன. மேலும் இருநாடுகளும் வரிகளை குறைக்கும் முடிவும் எடுத்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதும், சீனாவை நோக்கி கடுமையான வரி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் பகுதியாக, சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி 145% ஆக உயர்த்தப்பட்டது. பதிலுக்கு சீனாவும், அமெரிக்க பொருட்களுக்கு 125% வரி விதித்தது. இதனால் இருநாடுகளுக்கிடையே வர்த்தக போர் தீவிரமடைந்தது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச வர்த்தகக் கூட்டத்தில், இருநாடுகளும் சமாதானத்திற்கு வர சம்மதித்தன. அதன் படி, அமெரிக்கா சீனப் பொருட்கள் மீதான வரியை 145% இலிருந்து 30% ஆக குறைக்க, சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது விதித்த 125% வரியை 10% ஆக குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த பரஸ்பர ஒத்துழைப்பு, உலக வர்த்தகத்துக்கே ஓர் நல்ல முன்னோடியாக அமைந்துள்ளதாக வணிக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.